நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் இருந்து ஒரு சிறு பகுதி PF (Provident Fund) ஆகப் பிடிக்கப்படும். இது வெறும் சேமிப்பு மட்டுமல்ல, ஒரு தொழிலாளியின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அரண்.
முதல் பதிவில் PF என்றால் என்ன என்பதைப் பார்த்தோம். இந்தப் பதிவில், PF கணக்கு வைத்திருப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் முக்கியமான நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. கட்டாயச் சேமிப்புப் பழக்கம்
நம்மில் பலருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், கையில் பணம் வரும்போது ஏதாவது ஒரு செலவு வந்துவிடும். ஆனால் பிஎஃப் திட்டத்தில், உங்கள் சம்பளம் உங்கள் கைக்கு வரும் முன்பே ஒரு குறிப்பிட்ட தொகை (12%) பிடித்தம் செய்யப்பட்டு, அது உங்களின் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இது ஒரு நீண்ட காலச் சேமிப்பு திட்டமாகும். இதனால் நீங்கள் 20 அல்லது 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும்போது, உங்கள் கையில் பல லட்சங்கள் அல்லது கோடி ரூபாய் கூட சேர வாய்ப்புள்ளது. உங்கள் முதுமை காலத்தை யாருடைய உதவியும் இன்றி கழிக்க இது பெரும் துணையாக இருக்கும்.
2. நிறுவனத்தின் பங்களிப்பு (Employer Contribution)
இது PF திட்டத்தில் உள்ள மிகப்பெரிய Benefits களில் ஒன்றாகும். பொதுவாக உங்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12% PF பங்களிப்பு பிடிக்கப்படும். பிறகு நீங்கள் வேலை செய்யும் நிறுவனமும் தனது பங்கிற்கு அதே 12% தொகையை உங்கள் கணக்கில் செலுத்தும். ஆக மொத்தம் ஒவ்வொரு மாதமும் உங்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 24% (Employee + Employer Contribution) PF கணக்கில் சேமிக்கப்படும்.
உதாரணமாக, உங்களின் சம்பளத்தில் இருந்து 2,000 ரூபாய் பிடித்தம் செய்து PF கணக்கில் சேமித்தால், நிறுவனமும் அதே 2,000 ரூபாயை உங்களின் PF கணக்கில் செலுத்தும். ஆக மொத்தம் 4,000 ரூபாய் உங்கள் PF கணக்கில் சேரும்.
வேறு எந்தச் சேமிப்புத் திட்டத்திலும் உங்கள் முதலீட்டைப் போலவே இன்னொருவர் முதலீடு செய்ய மாட்டார்கள். இது உங்களுக்குக் கிடைக்கும் இலவச லாபம் என்றே சொல்லலாம்.
3. அதிகப்படியான வட்டி விகிதம்
வங்கிச் சேமிப்பு கணக்குகளில் (Savings Account) 3% முதல் 4% வரைதான் வட்டி கிடைக்கும். ஆனால், பிஎஃப் கணக்கிற்கு அரசு வழக்கமாக 8% க்கும் அதிகமான வட்டியை வழங்குகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் “கூட்டு வட்டி” (Compound Interest) முறை.
அதாவது, உங்கள் PF கணக்கில் உள்ள அசலுக்கு மட்டும் வட்டி வராது. வட்டிக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும். இதனால் 10, 20 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது உங்கள் பணம் பல மடங்கு பெருகியிருக்கும்.
4. அவசர கால பணத்தேவை (Partial Withdrawal)
வேலையை விடும்போதுதான் PF பணத்தை எடுக்க முடியும் என்பது பழைய விதி. இப்போது பல முக்கியத் தேவைகளுக்காக உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து ஒரு பகுதியை முன்பணமாக (PF Advance) எடுத்துக்கொள்ளலாம்:
வேலையில்லாத காலம் (Unemployment): ஒரு மாதம் வேலை இல்லை என்றால் 75% பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இப்போது உள்ளது.
வீடு கட்டுதல் (Construction): சொந்தமாக நிலம் வாங்கவோ அல்லது வீடு கட்டவோ முன்பணம் பெறலாம்.
கல்வி மற்றும் திருமணம் (Education and Marriage): உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பணம் எடுக்கலாம்.
மருத்துவச் செலவு (illness): குடும்பத்தில் யாருக்காவது பெரிய அளவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காகப் பணம் எடுக்க முடியும்.
5. வரிச் சலுகைகள் (Tax Benefits)
வரி செலுத்தும் நிலையில் உள்ளவர்களுக்கு பிஎஃப் ஒரு வரப்பிரசாதம். வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ், உங்கள் பிஎஃப் கணக்கில் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு (Tax Deduction) பெறலாம்.
அதேபோல், நீங்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த பிறகு பிஎஃப் பணத்தை எடுக்கும்போது, அந்தத் தொகைக்கு எந்தவிதமான வரியும் விதிக்கப்படாது (Tax-Free Maturity). இது சேமிப்பையும் பாதுகாத்து வரியையும் மிச்சப்படுத்துகிறது.
6. இலவசக் காப்பீடு (EDLI Scheme)
பலருக்கும் தெரியாத ரகசியம் இது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் EDLI (Employees’ Deposit Linked Insurance) என்ற திட்டத்தின் கீழ் இலவச ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதற்காக நீங்கள் தனியாக ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. ஒரு தொழிலாளி பணியில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அவரது நாமினிக்கு (குடும்பத்தாருக்கு) 2.5 லட்சம் முதல் அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இது அந்தத் தொழிலாளியின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பாகும்.
7. ஓய்வூதியத் திட்டம் (Pension Benefits)
உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி (8.33%) ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS – Employee Pension Scheme) செல்கிறது. உங்களின் மொத்த சேவைக்காலம் (Service Period) 10 ஆண்டுகள் அல்லது அதற்க்கு அதிகமாக இருந்தால், நீங்கள் ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற்றுவிடுவீர்கள்.
நீங்கள் 58 வயதை அடையும்போது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷனாக உங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் பென்ஷன் கிடைக்க இதில் வழிவகை உள்ளது.
முடிவுரை
பிஎஃப் என்பது வெறும் பணம் சேமிக்கும் கணக்கு மட்டுமல்ல; அது உங்கள் வாழ்நாள் பாதுகாப்பு. அரசு வழங்கும் அதிக வட்டி, இலவசக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற இத்தனை நன்மைகளும் ஒரே இடத்தில் கிடைப்பது பிஎஃப் திட்டத்தில் மட்டும்தான்.
எனவே, உங்களது UAN (Universal Account Number) மற்றும் பிஎஃப் கணக்கைச் சரியாகப் பராமரித்து வாருங்கள். இது உங்கள் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளம்.