EPF Withdrawal Claim Forms 2026: PF Form வகைகள் மற்றும் நோக்கம்

நமது உழைப்பின் ஒரு பகுதியைச் சேமித்து, வருங்காலத்தில் ஒரு பெரிய நிதியாக மாற்றுவதுதான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF). ஆனால், பல நேரங்களில் அவசரத் தேவைகளுக்காகவோ அல்லது வேலை மாற்றத்தின் போதோ அந்தப் பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்களிடம் UAN Number இருக்கலாம். ஆனால், ஆன்லைனில் பணத்தை எடுக்கச் சென்றால் அங்கு பல வகையான படிவங்கள் (Forms) கொடுக்கப்பட்டிருக்கும்.

எந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்தால் அட்வான்ஸ் பணம் கிடைக்கும்? முழுப் பணத்தை எடுக்க எந்த Form-ஐப் பயன்படுத்த வேண்டும்? பென்ஷன் பணத்தை எப்படி எடுப்பது?

இப்படி உங்களுக்குள் எழும் அத்தனை கேள்விகளுக்கும் விடை கொடுக்கும் வகையில், PF Claim Forms பற்றிய முழுமையான தகவல்களை இந்தக் கட்டுரையில் ஆழமாகப் பார்க்கலாம்.

PF பணம் எப்படிப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது?

படிவங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன், உங்களின் PF கணக்கில் பணம் எப்படிச் சென்று சேர்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது, உங்களின் அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் செலுத்தப்படும். இது உங்களின் சொந்த சேமிப்பு.

அதேபோல, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமும் உங்களின் கணக்கிற்கு அதே அளவு தொகையைச் செலுத்துவார்கள். ஆனால், அந்தத் தொகை இரண்டு வெவ்வேறு கணக்குகளில் பிரிக்கப்படும்.

PF சேமிப்பு அட்டவணை (எளிமையான புரிதலுக்கு):

யார் செலுத்துவது?EPF (PF கணக்கு)EPS (பென்ஷன் கணக்கு)
ஊழியர் (Employee) (12%)12%0%
நிறுவனம் (Employer) (12%)3.67%8.33%

எனவே, உங்களின் தேவை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப எந்தக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து PF படிவங்கள் மாறும்.

முக்கியமான EPF Withdrawal Claim Forms

வேலையில் இருக்கும்போது அட்வான்ஸ் எடுப்பது முதல், வேலையை விட்ட பிறகு முழுப் பணத்தையும் பென்ஷனையும் எடுப்பது வரை, ஒவ்வொரு படிவத்தின் நோக்கத்தையும் வரிசையாகப் பார்ப்போம்.

1. Form 31 (PF Advance தொகையை எடுக்க)

வேலையை விட்டு நின்றால் மட்டுமே PF பணத்தை எடுக்க முடியுமா? கண்டிப்பாக இல்லை! நீங்கள் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே, அவசரத் தேவைக்குப் பணம் எடுக்க Form 31 உதவும்.

உங்கள் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் ஒரு பகுதியை மட்டும் முன்கூட்டியே எடுப்பதற்கு (PF Advance) இந்தப் படிவம் பயன்படுகிறது.

எந்தெந்த காரணங்களுக்காக Advance எடுக்கலாம்?

  • மருத்துவச் செலவு (Illness): இதற்கு எவ்வித Service லிமிட்டும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் இதற்க்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. மிக விரைவாகப் பணம் கிடைக்கும்.
  • திருமணம் (Marriage): குறைந்தது 7 வருடங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். உங்களின் பங்கில் 50% வரை எடுக்கலாம்.
  • உயர் கல்வி (Higher Education): குழந்தைகளுடைய கல்லூரி படிப்பிற்காக இதைப் பயன்படுத்தலாம். இதற்கும் 7 வருட பணிக்காலம் அவசியம்.
  • வீடு கட்ட / வாங்க (House/Site Purchase): 5 வருட பணிக்காலம் முடிந்திருந்தால், வீடு கட்ட அல்லது வாங்க கணிசமான தொகையை எடுக்கலாம்.

2. Form 19 (PF முழுத் தொகையையும் எடுக்க)

நீங்கள் உங்களின் தற்போதைய வேலையை விட்டு முழுமையாக விலகிவிட்டீர்கள் (Resigned) என்றால், உங்களின் EPF கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் எடுக்கப் பயன்படும் படிவம் தான் Form 19.

இந்தப் படிவத்தை ஆன்லைனில் அப்ளை செய்யும் போது, நீங்கள் செலுத்திய 12% பங்கு, நிறுவனம் செலுத்திய 3.67% பங்கு மற்றும் அதற்கான வட்டி என அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.

ஆனால், நீங்கள் வேலையை விட்ட தேதி (Date of Exit) உங்களின் PF கணக்கில் பதிவாகியிருக்க வேண்டும். அந்தத் தேதியில் இருந்து சரியாக 60 நாட்கள் (2 மாதங்கள்) கடந்திருந்தால் மட்டுமே இதை அப்ளை செய்ய முடியும்.

முக்கிய குறிப்பு: உங்களின் சேவைக்காலம் 5 வருடங்களுக்கும் குறைவாக இருக்கும்போது, அதே நேரத்தில் உங்களின் PF Withdrawal பணம் Rs.50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், உங்களின் UAN கணக்கில் நிச்சயமாக PAN Card யை அப்டேட் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் Tax பிடித்தம் செய்வார்கள்.

3. Form 10C (பென்ஷன் பணத்தை எடுக்க)

Form 19-ஐப் பயன்படுத்தி உங்களின் EPF பணத்தை முழுமையாக எடுத்துவிட்டீர்கள். அடுத்து, உங்களின் நிறுவனம் செலுத்திய 8.33% ஓய்வூதியப் பணத்தை (Pension Fund) எடுக்க Form 10C-ஐப் பயன்படுத்த வேண்டும்.

Form 19 அப்ளை செய்யும் அதே நேரத்திலேயே, இந்த Form 10C-யும் சேர்த்து ஆன்லைனில் அப்ளை செய்துவிடலாம். இதனால் இரண்டு தொகையும் அடுத்தடுத்து உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.

ஆனால், இதற்கென சில விதிகள் உள்ளன. உங்களின் மொத்தப் பணிக்காலம் (Service Period) 9.5 வருடங்களுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

நீங்கள் 9.5 (113 மாதங்கள்) வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பென்ஷன் பங்களிப்பை செலுத்தி வேலை பார்த்திருந்தால், உங்களால் இந்தப் பென்ஷன் பணத்தை எடுக்க முடியாது. அதற்குப் பதில் Scheme Certificate அதாவது திட்ட சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம்.

4. Form 10D (மாத ஓய்வூதியத்திற்கு)

நீங்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும், உங்களின் மொத்தப் பணிக்காலம் 10 வருடங்களைத் தாண்டிவிட்டால் பென்ஷன் பணத்தை எடுக்க முடியாது.

இந்தச் சூழலில், உங்களுக்கு 58 வயது பூர்த்தியானவுடன், மாதாமாதம் ஓய்வூதியம் (Monthly Pension) பெறுவதற்கு நீங்கள் Form 10D-ஐப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் 51 வயதில் இருந்து கூட குறைக்கப்பட்ட மாத ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதைச் சரியாகச் சமர்ப்பித்துவிட்டால், EPFO அமைப்பு உங்களின் பணிக்காலத்தைக் கணக்கிட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக உங்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பிவிடும்.

5. Form 13 (PF கணக்கை மாற்றுவதற்கு)

தற்போதைய காலகட்டத்தில் கேரியர் வளர்ச்சிக்காக நிறுவனங்களை (Company Switch) மாற்றுவது சகஜம். அப்படி மாறும்போது உங்களுடைய UAN Number ஒன்றாகவே இருக்கும். ஆனால், புதிய நிறுவனத்திற்கு என்று ஒரு புதிய Member ID அதாவது PF Account உருவாக்கப்படும்.

அப்போது, பழைய நிறுவனத்தின் PF பணத்தைப் புதிய PF கணக்கிற்கு மாற்றப் பயன்படும் படிவம் தான் Form 13.

பழைய பணத்தை Transfer செய்யாமல் நேரடியாக Form 19 மூலம் பணத்தை எடுக்க முயன்றால், புதிய கணக்கில் உள்ள பணம் மட்டுமே கிடைக்கும். எனவே, வேலை மாறும்போது ஆன்லைனில் PF Transfer செய்வது மிக மிக அவசியம்.

Online PF Claim செய்வதற்குத் தேவையானவை (Prerequisites)

எந்த ஒரு அலுவலகத்திற்கும் அலையாமல், நேரடியாக EPFO Member Portal மூலமாகவே நீங்கள் பணத்தை கிளைம் செய்துவிடலாம். ஆனால், அதற்கு முன் கீழ்கண்ட விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும்:

  1. உங்களின் UAN Number ஆக்டிவேட் செய்யப்பட்டு, அதற்கான பாஸ்வேர்டு இருக்க வேண்டும்.
  2. ஆதார் (Aadhaar), பான் கார்டு (PAN) மற்றும் Bank Account ஆகிய PF KYC விவரங்கள் அப்டேட் ஆகி, Digitally Approved நிலையில் இருக்க வேண்டும்.
  3. உங்களின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்க வேண்டும் (OTP-க்காக).
  4. வேலையை ராஜினாமா செய்த பிறகு முழு பணத்தையும் எடுப்பதாக இருந்தால், Date of Exit உங்களின் கணக்கில் சரியாகப் பதிவாகியிருக்க வேண்டும்.

முடிவுரை

EPF என்பது நமது ஓய்வு காலத்திற்கும், நெருக்கடியான நேரங்களுக்கும் உதவும் மிக முக்கியமான நிதி அரண். அவசரத் தேவைகள் வரும்போது நமக்கான சொந்தப் பணத்தை நாமே எடுத்துக்கொள்ள இது உதவுகிறது.

எந்தெந்த PF Claim Forms-ஐ எதற்காக, எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இருந்தால் எந்த ஒரு சிக்கலும் இன்றி உங்களின் பணத்தைப் பெறலாம்.

இந்தக் கட்டுரை உங்களின் சந்தேகங்களைப் போக்கி, தெளிவான வழிகாட்டியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் தேவையைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் அப்ளை செய்து உங்களின் பணத்தைப் பெறுங்கள்.

Leave a Comment